Thursday, November 6, 2008

கடவுளும் கார்த்திகேயனும் -01

கடவுளும் கார்த்திகேயனும் -01

கடவுள் அன்பானவர்.

கடவுள் கருணை உள்ளவர் - சிறு வயதில் படித்தது.


தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களில் இருக்கும் படித்த இளைஞர்களை போலவே கார்த்திகேயனும் ஊரை விட்டு நகரத்தில் தஞ்சம் புகுந்தவன். காரணம் ஒன்றும் பெரிய பில் கேட்ஸ் மாதிரி ஆக வேண்டும் என்ற லட்சியம் எல்லாம் இல்லை. ஒரு வேலை, கொஞ்சம் சம்பாத்யம், முக்கியமாக 6 மணி நேர தூக்கம். அதுவும் காலையில் 4 முதல் 6 வரை நிம்மதியாக தூங்க வேண்டும். கார்த்திகேயனுக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டம். வீட்டின் வலது பக்கம் ஒரு சர்ச்சும் வலது இடது பக்கம் ஒரு கோயிலும் பூர்வஜென்ம புண்ய கரும வினைகளால் அமைந்திருந்தது. கடைசியாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் பட கதாநாயகிஉடன் கரீபியன் கடலில் உல்லாச படகில் ( கனவில் தான்) சென்று கொண்டிருந்த போது "சாமியே சரணம்" மற்றும் "ஏசுவே ரட்சியும் " என்ற இரு கடவுளர்களின் பள்ளியெழுச்சி பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வெடிக்க, கனவு கலைந்து, உறக்கம் கலைந்து சூறாவளியில் அடிபட்ட சுண்டெலியாய் குளிரில் நடுங்கிக்கொண்டே எழுவான் கார்த்திகேயன். எழுந்த உடன் ஒரு டீ போட்டு கொடுத்து விடுவாள் அம்மா. "காலையில படிச்சா தாண்டே மண்டையில நல்லா ஏறும்" இது அப்பா. மணி 4 ஆகி இருக்கும். அந்த நேரத்தில் துயில் எழுவது சர்வ வல்லமை பொருந்திய கடவுளுக்கு சாத்தியமே தவிர, இருட்டில் மூத்திரம் அடிக்கவே பயப்படும் கார்த்திகேயனுக்கு இது பெரும் கலவரமான ஒன்றாகவே இருந்து வந்தது. மேலும் அவனுக்கு காலையில் படித்தால் ஒரு எழவும் புரியாது என்பதும், மற்றும் காலையில் நான்கு மணிக்கு எழுவதால் அந்த நாள் முழுவதும் ஒல்டுமாங்கை ஓவராக குடித்து போல நாராசமாய் இருக்கும் என்பது யாரிடமும் சொல்ல முடியாமல் இருந்து வந்தது.

கார்த்திகேயனுக்கு சத்தம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் அவன் ஊரில் ஊளையிடுவது போல சத்தமாக பேசினால் தான் ஆம்பளை என்று மதிப்பார்கள். அப்புறம் இந்த சொந்தகார மாமி, பெரியம்மா, சித்தி போன்ற பாசமலர்களிடம் மாட்டினால் அவ்வளவுதான், காது கிழியும் வரை கீச்சி பாசத்தை கொட்டிவிடுவார்கள்.

இன்னும் சில அட்வான்ஸ்டு மாமிகள் உண்டு. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்கள் (சின்ன பசங்களுக்கு தான்). காலையிலேயே பழைய சோற்றையும் மீன் கறியும் சாப்பிட்டு , பாண்ட்ஸ் பவுடரும் போட்டு வந்து முத்தம் கொடுத்தால் எப்படி இருக்கும்?. வாந்தி வராத குறை தான்! இதில் வெற்றிலை போட்ட கிழவிகள் அட்டகாசம் வேறு. இதற்கு பயந்தே கார்த்திகேயன் ஊரில் எந்த விசேஷமானாலும் போக மாட்டான். இப்போதும் அப்படித்தான். விடுமுறை விட்டால் கூட ஊருக்கு போவதில்லை. அந்த நாற்றத்திற்கு நம்ம டாஸ்மாக் ஓல்டு மங்கு நாற்றமே பரவாயில்லை என்பான். ஒரு வழியாக தன் 26 வயதில் ஊரை விட்டு வந்து சிட்டியில் செட்டிலான கார்த்திகேயன் இப்போதும் கோயில் கடவுள் என்றால் அலறுவான். காரணம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

ராவணபிரபு.

No comments:

Post a Comment