Saturday, April 28, 2012

பிரிவு - தனிமை




அன்பு  காதலி!
வெப் காமிராவில்
உர்ரென்று உன்னையே பார்த்துக்கொண்டிருந்த
வேளையில்
அழகாய் உதட்டை சுழிக்கிறாய்!
எப்படி முடிகிறது உன்னால்?
ஒரு நொடியில் உன் காதல் மொத்தமும்
என் மேல் ஓர் அருவியாய் கொட்டிவிட?



என் தனிமையில் வீட்டின் அறைகளில்
மல்லிகை வாசனையும், கொலுசு சத்தமும்! - பயமில்லை
எனக்குத்தெரியும்
அவை எனக்காய் நீ விட்டுசென்றவைகள் என்று!



நீ விட்டுச்சென்ற கைக்குட்டையை 
துவைத்து உலர வைக்கும் போதுதான்
கவனித்தேன்,
போனது அழுக்கு மட்டும் தான்!
உன் வாசனை இன்னும்
அதிக  சுகந்தமாய்!



இப்போதெல்லாம் துவைத்த என் ஆடைகள்
உலர மறுக்கின்றன.
அருகில் உன் ஆடைகள் இல்லாததால்
அவற்றிற்கு கூட
குளிர் ஜூரம்!



 கட்டிலில் உனக்காய்
இடை வெளி விட்டு
படுத்துக்கொள்கிறேன்,
கனவில் நீ வந்து என்னுடன்  படுத்துக்கொவாய்
என்பதால்.



ஒருநாள் வாங்கிவந்த
வாழைத்தண்டை நான் ஜூஸ் போடவே இல்லை,
வளையல்கள் அணியாத உன்
கரங்கள் போலவே 
இருந்ததால்.



அடிக்கடி உன் புகைப்பட ஆல்பத்தை 
திறந்து பார்கிறேன்,
உன் உருவத்தில் இருக்கும்
உன் வாசனையை நுகர,
எவன் சொன்னான் - உயிர் வாழ ஆக்சிஜன் வேண்டும் என்று?



எல்லா விளக்கையும் அணைத்து விட்டு
ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றி
உற்று நோக்கினேன் - ஊகூம்
உன்னை விட அது ஒன்றும் பெரிய அழகு இல்லை!



அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிந்து ஓடியதை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்,
துயில் கலைந்து
போர்வைக்குள் இருந்து
எட்டிப்பார்க்கும் உன் முகம் போலவே இருந்ததால்!



முற்றிய போதும் அறுக்க மனம் வரவில்லை,
பச்சை மிளகுச்செடிகளின் மத்தியில்
இருக்கும் அந்த ஒற்றை சிவப்புக் கீரையை,
ஏனோ பார்க்கும் போது உன்னை உணர்த்துவதால்.

ஆடையில்லா மனிதன் அரை மனிதனாம்! 
நான் அதைவிட சிறியவனாகிப்போனேன்,
அகமுடையவள் உன் அருகின்மையால்!
 
----   ராவண பிரபு
 

நீ என்ற என் தேவதை...






கோபம் வரும்போது எதையாவது
எடுத்து எறியும் என்னால்
எப்போதுமே எறிய முடிவதில்லை,
என் மனதில் உள்ள
உன் நினைவுகளையும்,
தேவதை உன் உருவத்தையும்!

தேநீரில் சர்க்கரை இட
மறந்ததற்கு வருத்தம்
கொள்கிறாய்
ஏன்?
நீ ஒரு வாய் குடித்து விட்டு
 
கொடுத்தால்
போதாதா?


சாயம் இல்லாமலேயே
சிவந்த
உன் உதடுகள்
இன்னும் சிவப்பாகின்றன,
நீ திருட்டுத் தனமாய்
என்னைப் பார்த்து புன்னகை
சிந்தும் போது!

நம் காதல் மலரில்
சிறிது காமத்தின் கள்;
காற்று உன் மாராப்பை
விலக்கியது!!!
----- ராவண பிரபு